• Skip to primary navigation
  • Skip to main content

Thamiziniyan

INTP-LOGICIAN, Journalist, Social Media Editor, Few BOTS, Inactive WordPress developer, Bibliophile, Coffee Addict.

  • Start Here
  • What I Read
  • Blog
    • Blog Elsewhere
  • Yours Scientifically Iniyan
  • WordPress Plugins
  • I’m an Introvert. But, Contact
  • Show Search
Hide Search
You are here: Home / Book Reviews / “தென்னாப்பிரிக்காவில் காந்தி” – புத்தக மதிப்புரை

“தென்னாப்பிரிக்காவில் காந்தி” – புத்தக மதிப்புரை

March 19, 2015 | Leave a Comment

இந்தியர்களைப் பொறுத்தவரை தாங்கள் விரும்பும்/மதிக்கும் மனிதர்களை, புனிதர்களாக உயர்த்தி அவர்களைச் சுற்றி ஒரு புனித பிம்பத்தைக் கட்டியமைத்துவிட்டு, உண்மையை முழுதாகவோ அல்லது பகுதியாகவோ திரைபோட்டு மறைத்துவிடுவார்கள். உண்மை யாருக்கும் வேண்டியதில்லை. அதனால் பைசா உபயோகமும் கிடையாது. ஆனால், கட்டி எழுப்பப்பட்ட புகழ் மயக்கங்களோ இனிமையைத் தரும்.

காந்தி, நேதாஜி, நேரு, அம்பேத்கர், பெரியார் என்று அத்தனைத் தலைவர்களையும் சுற்றியும் நம்மூரில் எத்தனை மாயக்கோட்டைகள் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. ஒரே ஒரு நிமிடம் மேலே கூறியவர்களைப் பற்றி யோசித்துப் பார்த்தாலும் இத்தகைய பாதிப் போலியான புகழுரைகள்தான் உடனே நினைவுக்கு வருகின்றன. ஒரு தலைவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதுவதில் இத்தகைய கேலிக்கூத்துகள் அதிகமாகவே நடக்கும். அவர்களாகவே எழுதிய சுயசரிதைகளும் சில விடுபடல்களோடேயே இருக்கும். முதன்மைச் சீடர்கள் எழுதிய வாழ்க்கை வரலாறுகளோ மிகையான புகழுரைகளாக இருக்கும். சில குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் எழுதும் வாழ்க்கை வரலாறுகளோ முதன்மைச் சீடர்களின் புகழுரைகளுடன், அவர்களது இடைச்செருகல்களும் அதிகமாக இருக்கும். உண்மையான வாழ்க்கை வரலாறுகள் அரிதானவையே.

காந்தியின் சுயசரிதையும் கூட இத்தகைய விடுபடுதல்கள் உடையதே என்பது என் முடிவு. தென்னாப்பிரிக்காவில் ரயிலில் அவருக்கு நிகழ்ந்த இனவாதத் தாக்குதல் பற்றி எழுதியவர். அதே பாதையில் அவர் திரும்பியபோது என்ன நடந்தது என்பதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறாரா? ஆனால், நமக்கு முழுமையை நோக்கிய பார்வையில் அக்கறை இல்லை. மூளை அதிர கண்கள் கசிய அந்த இனவாதத் தாக்குதலைப் பற்றிய பேச்சு நமக்குப் போதும். இந்நிலையில்தான் குஹா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை இரண்டு பாகங்களாக எழுதப் போகும் செய்தி வந்தது. அதில் முதல் பாகமான “Gandhi Before India” நூல் வெளியாகி தற்போது தமிழ் மொழிபெயர்ப்பும் வந்திருக்கிறது.

குஹாவின், மேற்கோள்களைக் கொண்டே எழுத்தை நீட்டிச் செல்லும் வழக்கம், காந்தியின் வாழ்க்கை மீதான புதிய ஒளியைப் பாய்ச்சும் என்ற நம்பிக்கை இருந்தது. அது பெருமளவில் உண்மையாகியும் இருக்கிறது. — இந்த வாழ்க்கை வரலாற்று நூலை எழுதி முடிக்க அவர் மேற்கொண்ட சான்றுகளின் தேடலை குறைத்து மதிப்பிட இயலாது. இதுவரை வெளிவராத சில சான்றுகளையும், ஆவணங்களையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். காந்தியைப் பற்றி இதுவரை நாம் அறிந்த சில தகவல்களின் நீள அகலங்களை மறுவரையறை செய்திருக்கிறார் குஹா.

தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்திலேயே இந்தியர்களின் போராட்டங்கள் விரைவில் முடிந்துவிட்டால் வழக்கறிஞர் படிப்புக்கு அடுத்ததாக லண்டனில் இன்னொரு படிப்பையும் காந்தி தொடரவிரும்பியிருக்கிறார். காலப்போக்கில் அது தொடர்பான கொள்கை மாற்றங்கள் அவருக்குள் ஏற்பட அதைத் தொடராமல் விட்டிருக்கிறார். புற்றுநோயைக் கூட நோயாளியின் மன உறுதியும் உணவு முறையும் எதிர்த்துப் போரிடும் என்ற கருத்து கொண்டவர் எடுத்திருந்த அந்த முடிவு ஆச்சரியம்தான்.

இதுவரையிலான காந்தி வரலாற்றை எழுதியவர்கள் காந்திக்கும் ஜின்னாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது 1908ஆம் ஆண்டு என்று பதிவு செய்திருக்கிறார்கள். 1895-1898 வரையிலான காலகட்டத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்த காந்தியுடன் ஜின்னா நடத்திய கடிதத் தொடர்புகள் பற்றிய தகவல், கடிதங்களுக்கான பதிவேடு (Letter’s Log Book) ஒன்றின் மூலம் முதன்முதலாக வெளிவந்திருக்கிறது. அக்கடிதங்கள் நமக்குக் கிடைக்காத நிலையில் அவற்றின் உள்ளடக்கம் பற்றித் தெரியவில்லை. அப்போதுதான் பாரிஸ்டர் படிப்பை முடித்த ஜின்னா, தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞர் பணி வாய்ப்பு குறித்துப் பேசியிருக்கலாம் என்கிறார் குஹா. அப்படி காந்தியோடு தென்னாப்பிரிக்காவில் ஜின்னா வழக்கறிஞராக இணைந்து பணியாற்றியிருந்தால் வரலாற்றின் போக்கில் ஒரு சிறு திருப்பம் நடந்திருக்கலாம். காந்தியின் இளமைக் கால ஆளுமை பெரும்பாலும் எல்லோரையும் கவர்ந்தே இருக்கிறது.

காந்தியின் தென்னாப்பிரிக்க வாழ்வை சில பக்கங்களில் அல்லது அத்தியாயங்களில் எல்லோரும் கடந்துவிட அந்தக் காலகட்டமோ அவரது வாழ்வின் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியைக் கொண்டிருக்கிறது. காந்தியின் தென்னாப்பிரிக்க வாழ்வு ஏன் இத்தனை முக்கியத்துவத்தோடு அலசப்பட வேண்டும்?

காந்தி ஐரோப்பிய பாணியிலான உடையிலிருந்து நேரடியாக அரையாடைக்கு மாறிவிடவில்லை. இயல்பிலேயே மென்மையான குணம் கொண்ட நபர் உடனே சத்தியாகிரகத்தைக் கைக்கொண்டு விட முடியாது. மனு போடுவதற்கும் குண்டு போடுவதற்குமான இடைநிலையை உடனே செயல்படுத்தி வெற்றி கண்டுவிட முடியாது. இந்தச் செயல்களுக்கு எல்லாம் இடைநிலைப்படி என்ற ஒன்று இருக்கிறது. காந்திக்கு அந்த இடைநிலை தென்னாப்பிரிக்காவில் நடக்கிறது. காந்தியின் இந்திய விடுதலைப் போராட்டங்கள் சாம்ப்ரான் சத்தியாகிரகத்தில் தொடங்கவில்லை, தென்னாப்பிரிக்காவில் தொடங்கியிருக்கிறது.

காந்தியின் தென்னாப்பிரிக்க வாழ்வு அவரது ஆளுமையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது போராட்ட வடிவங்களைச் சோதித்துப் பார்த்த களமாக விளங்கியிருக்கிறது. இந்தப் புத்தகம் அந்த ஆளுமை மாற்றத்தையும், அவரது கொள்கைகளில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சிகளையும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது.

“இந்தியர்களின் உணவுப் பழக்கத்தைக் கூட அவர்களின் மதம்தான் தீர்மானிக்கிறது” என்று இந்திய வரலாற்று ஆய்வாளர் டி.டி. கோசாம்பி குறிப்பிட்டிருப்பது பெரும்பாலான இந்தியர்களைப் போலவே துவக்ககால மகாத்மாவுக்கும் பொருந்திப் போகிறது. தன் சாதிக்குரிய கட்டுப்பாடுகளோடும், தாய்க்குக் கொடுத்த சத்தியத்தின் அடிப்படையிலும் சைவ உணவாளராக இருந்த காந்தி இங்கிலாந்தில் சைவ உணவாளர்களைச் சந்தித்த பிறகு சைவ உணவுப் பழக்கத்தை சாதிக்கட்டுப்பாடாக மட்டுமே கருதாமல் அதை ஒரு வாழ்க்கை முறையாக தென்னாப்பிரிக்காவில் வளர்த்தெடுக்க ஆரம்பிக்கிறார்.

இந்தியாவில் பிற்காலத்தில் அவர் நடத்திய போராட்டங்களுக்கு நிகரான போராட்டங்களைத் தென்னாப்பிரிக்காவில் நடத்துகிறார். இந்தியர்கள் இனவாதத்துடனும் நிறவாதத்துடனும் நடத்தப்பெறுவதைக் கண்டிக்கிறார். அதே சமயம் கருப்பினத்தவர்கள் மீது தாழ்வானதொரு பார்வையை வைத்திருக்கிறார் (துவக்க காலத்தில்). சீனர்களுடன் இணைந்து போராடும் அவர் ஆப்பிரிக்கர்களுடன் இணையவில்லை. அவர்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை. (அதேசமயம் ஒரு ஆப்பிரிக்க பூர்வகுடி இனத்தலைவர் காந்தி சிறையில் அடைக்கப்பட்டதற்காக கண்டனம் தெரிவிக்கிறார். அவருடைய சத்தியாகிரக போராட்ட வடிவத்தைப் புகழ்வதோடு, ஆப்பிரிக்கர்களும் இந்தப் போராட்ட வடிவத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்கிறார். அவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறார். மண்டேலாவுக்கும் முன்பாக அங்கே காந்திக்கு ரசிகர்களும் சீடர்களும் இருந்திருக்கிறார்கள்.) காலப்போக்கில் அவரில் ஏற்படும் ஆளுமை மாற்றத்தாலும் புரிதலாலும் படிப்படியாக அவரது இந்த எண்ணங்கள் மாற்றம் பெறுகின்றன. இறுதியில் ஆப்பிரிக்கர்களுக்காகக் குரல் கொடுக்கிறார். காலன்பாக் அமைத்த டால்ஸ்டாய் பண்ணையில் ஆப்பிரிக்கர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். ஆப்பிரிக்க மக்களை பூர்வகுடிகளாக ஏற்கிறார். அவர்களையும் தன்னுடைய போராட்ட வடிவங்களைக் கைக்கொள்ளுமாறு அழைக்கிறார்.

வாழ்க்கையையும் அவருடைய போராட்ட முறைகளையும், முயன்று தவறிக் கற்கும் களமாக அவருக்குத் தென்னாப்பிரிக்கா விளங்கியிருக்கிறது. — வெவ்வேறு இரு நிலப்பகுதிகளில், வாழ்வின் இருவேறு காலகட்டங்களில் ஒரே மாதிரியான வாழ்க்கையை, ஒரே மாதிரியான தோழர்களும் எதிரிகளுமாக, இரண்டு முறை வாழ்வதென்பது சபிக்கப்பட்ட வாழ்க்கைதான்.

காந்தியின் தோழர்களான ஹென்றி போலாக், மில்லி போலாக், இன்னும் சிலரும் நூல் முழுக்க அவருடன் நிகழ்த்தும் உரையாடல்கள் காந்தியின் பல கொள்கைகளின் மீது தாக்கம் செலுத்துகிறது, அவர்களுடைய கொள்கைகளிலும் வாழ்க்கை முறைகளிலும் காந்தி மாற்றங்களை உண்டுசெய்கிறார். இப்படி அவருடன் உரையாடும் தோழர்கள் ஒருபுறம் என்றாலும் அவருடைய தலைமையை அப்படியே மறுப்பேதும் சொல்லாமல் ஏற்றுக்கொள்ளும் சீடர்கள் இன்னொருபுறம். பின்னாளில் இந்தியாவிலும் இதுபோன்ற ஒரு சீடர் படை அவரைச் சுற்றி உருவானதைப் போலவே வந்துபோகிறார்கள். தோழராக இல்லாமல் எதிராக நின்று உரையாடியவர்கள், அவர் தலைமயை ஏற்க மறுக்கும் நபர்கள், தங்களுக்குள் யார் அவருக்கு முதன்மைச் சீடராவது என்று மோதிக்கொள்ளும் நபர்கள் என்று இந்தியாவில் தான் சந்திக்கப்போகும் மனிதர்களை ஒத்தவர்களோடு தென்னாப்பிரிக்காவிலேயே வாழ்ந்திருக்கிறார். பின்னாளில் சர்ச்சில் போன்ற வெள்ளையின ஏகாதிபத்தியவாதிகள் காந்தி மீது கொள்ளப்போகும் அபிப்பிராயங்களை அப்போதே சாம்னி, ஸ்மட்ஸ் என்று தென்னாப்பிரிக்க ஐரோப்பியர்கள் இவர் மீது கொண்டிருக்கிறார்கள். (தென்னாப்பிரிக்காவில்) இறுதிக்காலத்தில் இஸ்லாமியர்கள் சிலர் காந்தியோடு முரண்படுகிறார்கள். அவர்களில் சிலர் காந்தியைக் கொல்ல முயற்சிக்கப்போவதாக ஒரு வதந்தி அவர் காதுக்கு வருகிறது. “என் நாட்டுக்காரரால் நான் கொல்லப்படுவதை விரும்புவேன். அது இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் ஒருங்கிணைக்கும்” என்று காந்தி சொல்கிறார்.

புத்தகத்தின் இறுதி அத்தியாயங்களின் மொழிபெயர்ப்பு கவனக்குறைவோடு செய்யப்பட்டிருப்பதால், காந்தி திடீரெனக் காலப்பயணங்கள் மேற்கொள்ளுகிறார், மாவோ ஜெடாங் என்று யாரோ ஒரு சீன புரட்சியாளரும் அறிமுகம் ஆகிறார். சிலருடைய பெயர்கள் இருபதாண்டுக் காலத்துக்குப் பிறகு மாற்றப்பட்டிருக்கின்றன. ஏ.எம்.கச்சாலியா ஏ.எம்.சகாலியாவாக, ராய்சந்த் பாய் ரேச்சந்த்பாயாக, சோன்யா செல்ஷன் சோன்ஜா ஷிலேஷினாகவும் சோன்யா ஷ்லெஷனாகவும், ராணடே ராணேவாக இப்படிப் பலரின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன, காந்தியின் பெயர் மாற்றப்படாத வரை மகிழ்ச்சி என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். சில இடங்களின் பெயர்களும் கூட இறுதி அத்தியாயங்களில் மாற்றப்பட்டிருக்கின்றன. மொழிபெயர்ப்பாளர் இந்தப் பெயர் மாற்றங்களை தென்னாப்பிரிக்க அரசிதழிலோ அல்லது இந்திய அரசிதழிலோ பதிவு செய்திருக்கிறாரா என்று தெரியவில்லை. இவையெல்லாம் போதாது என்று சராசரியாக மூன்று பக்கங்களுக்கு ஒரு பிழையோடு இருக்கிறது. பத்தி பிரிப்பதில் முந்தைய பத்தியில் முடிவுறாத வாக்கியம் ஒன்று அடுத்தப் பத்தியின் துவக்கமாகத் துவங்குகிறது.

மேற்கோள்களை, கடிதங்களை உள்ளொடுங்கிய பத்தியாக புத்தகத்தில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பானதாக இருந்தாலும் அதை ஒழுங்காகச் செய்திருக்க வேண்டும். சில கடிதங்கள் சாதாரணப் பத்திகளாகத் துவங்கி பாதியில் இருந்து உள்ளொடுங்கிய பத்தியாக மாறுகிறது. அப்படியே தலைகீழாகவும் சில இடங்களில் நடக்கிறது. இந்த எழுத்துப்பிழைகள், கட்டமைப்புப் பிழைகளைத் தாண்டி பெரிய அபத்தம் குறிப்புகள் அடங்கியத் தொகுப்புகளில் முதல் அத்தியாயத்துக்கும் இரண்டாம் அத்தியாயத்துக்கும் ஒரே தலைப்புதான்.

இத்தனைப் புவியியல் பரப்புகளையும் (மூன்று கண்டங்களை உள்ளடக்கிய பகுதியின் ஒருவாறான வரலாறு பேசப்படுகிறது.), உடன் நின்ற பல போராட்டத் தோழர்களையும் நண்பர்களையும் பதிவு செய்திருக்கும் போது (குஹா வே இந்தத் துணை நபர்கள் சிறப்பானவர்கள் என்று குறிப்பிடுகிறார்.) அது தொடர்பான சொல்லடைவு அகராதியோ குறைந்தபட்சம் பெயரடைவு அகராதியோ கட்டாயம் இணைத்திருக்க வேண்டும். புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பே இதனைக் கொண்டிருக்காத போது, தமிழ் மொழிபெயர்ப்பில் இதனை நாம் எதிர்பார்க்கக்கூடாதுதான். பெரும் உழைப்பு தேவைப்படும் இதுபோன்ற பணியை இப்போது எந்த தமிழ்ப் பதிப்பகங்களும் செய்வதே இல்லை. மெய்ப்புத் திருத்துபவர்கள் (Proof readers), பதிப்பாசிரியர்கள் (Editors), அகராதி உருவாக்குபவர்கள் (Indexer) –காரணப் பெயர்களாக இது போன்று சொற்களை மொழிபெயர்ப்பது அச்சொல்லுக்கு விளக்கம்தான் தருகின்றன. இடுகுறிப்பெயர்களாக மொழிபெயர்ப்பதே நல்லது என்று எனக்குப் படுகிறது– போன்ற நபர்களுக்கும் புத்தகப் பதிப்புக்கும் தொடர்புகளே இல்லை என்பது போன்ற ஒரு நிலை தமிழ்ப்பதிப்புலகில் நிலவுகிறது. இந்த நிலைமை மாறாத வரை சராசரியாக பக்கத்துக்கு மூன்று தவறுகளோடு பதிப்பிப்பதும், மூன்று பக்கங்களுக்கு ஒரு தவறோடும் பதிப்பதுமே தமிழ்ப்பதிப்புலகின் மரபாக இருந்துவிடும்.

காந்தியின் மரணத்தோடு முடிந்துவிட்டதாகக் கருதப்படும் நவீன இந்தியாவின் வரலாற்றை “இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு(India After Gandhi)” என்று எழுதிய குஹா , அடுத்ததாக “தென்னாப்பிரிக்காவில் காந்தி(Gandhi Before India)” என்று இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதன் அடுத்த பாகமாக Gandhi in India என்ற புத்தகத்தை எழுத இருக்கிறார். இது மட்டுமல்லாமல் “நவீன இந்தியாவின் சிற்பிகள் (Makers of Modern India)” என்ற புத்தகத்தையும் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார். 1857 தொடங்கி காந்தியின் வருகைக்கு முன்பு வரையான காலகட்டத்தைப் பற்றி இன்னொரு புத்தகத்தையும், இந்தியாவில் ஐரோப்பியர்களின் துவக்க காலத்தையும் எழுதிவிட்டால் கிரிக்கெட் வரலாற்றாளர் என்ற நிலையில் இருந்து நவீன இந்திய வரலாற்றை முழுதாக எழுதிய வரலாற்றாசிரியர் ஆகிவிடுவார் குஹா.

Filed Under: Book Reviews Tagged With: Biography, Book review, Gandhi, Ramachandra Guha, South Africa

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thamiziniyan

Proudly Powered By WordPress and Genesis

  • Medium
  • Goodreads
  • Github
  • WordPress
  • Twitter