Factfulness – #MyReadsMyNotes

காரில் உள்ள GPS சரியான இடத்தைக் காட்டாமல் சொதப்பினால், அதைத் தொடர்ந்து பயன்படுத்துவோமா? ஓடாத கடிகாரம் ஒரு நாளில் இரண்டு முறை சரியான நேரத்தைக் காட்டும் என்ற கருத்துகள் காலாவதியாகிவிட்டன. அப்படி இருக்க மனிதன் மட்டும் எப்படி ஒரு கருத்தை தவறாக புரிந்துகொண்டு அப்படியே வாழ்ந்துகொண்டிருக்க முடியும்? மனிதனின் இந்த தவறான புரிதலைக் களைத்தெறிய உதவக்கூடிய ஆய்வு மாதிரியை, ஆய்வுக்கருவிகளை நான் முன்வைக்கிறேன் என்ற நோக்கத்தோடு அவருடைய உரைகளின் தொடர்ச்சியாக Hans Rosling அவருடைய மகன் Ola Rosling மற்றும் மருமகள் Anna Rosling ஆகியோருடன் இணைந்து இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

நீங்கள் தவறவிடாமல் படிக்க வேண்டிய புத்தகம் இது என பில்கேட்ஸ் அவருடைய வலைப்பதிவில் குறிப்பிட இந்த புத்தகம் பிரபலமடைந்துவிட்டது. பில்கேட்ஸே சொல்லிவிட்டார் என்பதற்காக இந்த புத்தகம் பேசும் மையப்பொருளான தரவுகளை புரிந்துகொள்ளாமையோடு எல்லோரும் பேச ஆரம்பித்துவிட்டார்களோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு.

இந்த உலகம் சுபிட்சமாகவே இருக்கிறது. தவறாகப் புரிந்து வைத்திருக்கிறீர்களே எனும் முதலாளித்துவ பிரச்சாரமோ என முதல் சில பக்கங்கள் உணர்த்தும். அடுத்தடுத்த பக்கங்கள் ஆமாம், அதிலென்ன சந்தேகம் என உணர்த்தும்.

மாண்டேக் சிக் அலுவாலியாவை நினைவிருக்கிறதா? “ஒரு நாளைக்கு 32 ரூபாய்க்கு மேல் ஒருவர் சம்பாதித்தால், அவர் வறுமைக்கோட்டுக்குக் கீழே வரமட்டார்” என ஒரு அறிவிப்பை 2011-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது நினைவிருக்கிறதா? ஒருவர் ஆரோக்கியமான உணவை உண்ணுவதற்கு குறைந்தபட்சம் தேவையான கலோரிகளின் எண்ணிக்கை குறைத்து அறிவிக்கப்பட்டதும் நினைவிருக்கிறதா? இல்லாவிட்டாலும் பிரச்னையில்லை… சீப்பை ஒளித்து வைத்து திருமணத்தை நிறுத்தும் அதே அதிபுத்திசாலித்தன முயற்சி. இந்தக் கதை எல்லாம் இப்போது எதற்கு? இந்தப் புத்தகத்திலும் அதே அதிபுத்திசாலித்தனம் ஆங்காங்கே எட்டிப்பார்க்கும்.

உதாரணத்திற்கு 18-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவைச் சேர்ந்த ஒருவர் சம்பாதித்த தொகையைவிட 1970-ல் ஒருவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? என்ற ரேஞ்சில் ஒரு கேள்வி.

தனிநபரின் ஆயுட்காலம் அதிகரித்திருப்பது, குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்திருப்பது, சில நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருப்பது என மருத்துவத் துறையின் வளர்ச்சியை மட்டும் வைத்து ஒட்டுமொத்த மனிதகுல வரலாறும் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது என நம்புவது எந்த வகையிலும் என்னால் ஏற்க முடியாத விஷயம்.  ஒருதுறை சார்ந்த வளர்ச்சியின் அடிப்படையில் வர்க்க வேறுபாடுகளும், வர்க்க இடைவெளியும் உள்ள சமத்துவமற்ற சமூகத்தின் வளர்ச்சியாக கருதுவதை ஏற்கவே முடியாது.

“வளரும் நாடுகள்”, “வளர்ச்சியடைந்த நாடுகள்” என்ற இரண்டு அளவீடுகளை கழித்துவிட்டு, Level 1-4 என நான்கு அளவீடுகளைக் கொண்டு வருவதை நாம் அபத்தம் என நினைக்கலாம். அங்குதான் முதலாளித்துவ அளவீட்டு முறை வெளிப்படுகிறது. நான்கு விதமான வாங்கும் திறன் உள்ள மக்கள் அடங்கிய நாடுகளை குறிவைத்து (Target Marketing) வியாபரம் செய்ய இந்த முறை வாய்ப்பளிக்கிறது. பில்கேட்ஸ் இந்தப் புத்தகத்தைக் கொண்டாடாமல் போனால் தான் ஆச்சர்யம்.

இந்த Level 1-4 அளவீட்டு முறையில் உள்ள மற்றுமொரு ஆபத்து, வளரும் நாடுகளுக்கான சில சலுகைகளை நீக்கும் முயற்சிக்கு இதை பயன்படுத்தலாம். இத்தனை ஆண்டுகாலமாக இருக்கும் இடஒதுக்கீடு முறையால் வளர்ந்துவிட்டார்கள், அதனால் Creamy Layer எனப்படும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கொண்டு வருவதற்கான குரல்களைப் போலவே ஒலிக்கிறது.

 

— இந்தப் பதிவு நான் படிக்க படிக்க தொடர்ந்து எழுதப்பட்டுக்கொண்டே இருக்கும் —

Last Updated : 08/June/2018 08:00 am